தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா இரண்டாம் அலை பரவலால் நிகழ்வாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பள்ளிகளில் முழுக் கட்டணம் செலுத்த மாணவர்களை நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சி.பி.எஸ்.இ, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ, மற்றும் ஐ. பி பள்ளிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும்., அவர்களை எக்காரணம் கொண்டும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகள் மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வராத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை பொருத்தவரையில் அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை,அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.எல்.கே.ஜி முதல் பிளஸ்டூ வரையிலான மாணவர் சேர்க்கை விவரத்தை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.