ரசீது கொடுக்காமல் கட்டண வசூல் செய்த கல்லூரி : நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் !!
ஆம்பூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் (மஜ்ஹருலூம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்) சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது உரிய ரசீதுகள் வழங்கப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கல்லூரியில் சேரும்போதே மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்லூரியில் மாணவர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு ரசீது வழங்கும்படி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்கும்பொழுது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் மிரட்டல் விடுப்பதாகவும் இரண்டு நாட்களில் கல்லூரி தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்காமல் மாணவர்களை இழுத்தடித்து வருவதாகவும் கூறி கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கல்லூரி முதல்வர் இஸ்மாயில் மாணவர்களிடையே அநாகரிகமான முறையில் பதில் அளிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் கல்லூரி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் நகர் பொறுப்பு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.