அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.  

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலையில் நடைபெற்றது.

சுமார் 1 லட்சம் இடங்களில் சேர 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

143 கல்லூரிகளிலும் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. +2 மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை சரிபார்த்து அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தவிர 143 அரசு கல்லூரிகளிலும் M.A., M.Sc., M.Com., போன்ற முதுகலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் இன்று www.tngasapg.in இணையதளத்தில் தொடங்கி உள்ளது. இந்த படிப்புகளில் சேர வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.