ராணுவ ஹெலிகாப்டர் விபத்து...சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை....காவல்துறை எச்சரிக்கை...!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து...சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை....காவல்துறை எச்சரிக்கை...!!

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் வந்தபோது, அவர் வந்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவருடன் பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 ராணுவத்தினர் உயிரிழந்தனர். நாட்டையே உறையவைத்த இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக ஹெலிகாப்டர் விபத்து குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பலரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இதற்கிடையில் இந்திய விமானப் படை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற கோர ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று விபத்திற்கான உரிய காரணம் அறியும் வரை உயிரிழந்த வீரர்களின் மரியாதை கருதி தேவையற்ற வதந்திகள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஹெலிகாப்டர் விபத்தை மையப்படுத்தி பல்வேறு கருத்துக்களை பதிவிட்ட யூ-டியூபர் மாரிதாஸ் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷிபின் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.