இனி லஞ்சம் வாங்கினால் 10 நாட்களுக்குள் கடும் நடவடிக்கை...எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்!

இனி லஞ்சம் வாங்கினால் 10 நாட்களுக்குள் கடும் நடவடிக்கை...எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்!

மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக எல்லா பணிகளுக்கும் சம்மந்தப்பட்ட துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு அப்பணியை விரைவாக செய்து முடிப்பது என்பது அன்றாடம் மறைமுகமாக நடந்துக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் அந்த செயல் வெளிச்சத்திற்கு வந்து மிகப்பெரிய விவாத பொருளாகவும் மாறும். இதுகுறித்து அவ்வப்போது சம்மந்தப்பட்ட துறை சார்ந்த மேலிடம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குறையவே இல்லை என்றே சொல்லலாம். 

இதையும் படிக்க : சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்... சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்...?

அந்த வகையில் தற்போது, சேவை இணைப்புகளை வழங்குவதற்கு அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்சம் கோருவதும், வாங்குவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரையடுத்து, இத்தகைய இழிவான செயல்களில்  ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன், ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.