ரயில் தண்டவாளத்தில் சிதறி கிடந்த போலி ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு

தருமபுரி அருகே ரயில் தண்டவாளத்தில் கத்தை கத்தையாக போலி 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ரயில் தண்டவாளத்தில் சிதறி கிடந்த போலி ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் ராம்குமார் என்ற ரயில்வே ஊழியர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் செல்லும் ரயில் பாதையில் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தருமபுரி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தண்டவாளத்தில் அருகே இருந்த பெட்டி ஒன்றில் கட்டுக் கட்டாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. ஆனால் ரூபாய் நோட்டுகளின் நடுவே கார்ட்டூன் படம் அச்சிடப்பட்டிருப்பதால் காவல்துறையினர் இது சினிமா படப்பிடிப்பு அல்லது விளையாடுவதற்காக பயன்படுத்தப்படலாம் என எண்ணுகின்றனர்.

இருப்பினும், கட்டுக் கட்டாக நோட்டுகள் சிக்கியது போலீசாருக்கு சந்தேகத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரூபாய் நோட்டுகள் எந்த ரயிலில் இருந்து வீசப்பட்டிருக்கும் என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.