அரசு முறை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ஸ்டாலின்...

அரசு முறை பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோரை சந்தித்துவிட்டு சென்னை வந்தடைந்தார்.

அரசு முறை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ஸ்டாலின்...

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு முதல்முறையாக மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோரை நேரில் சந்தித்தது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் பிரதமரை சந்தித்த சுமார் 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஸ்டாலின், தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவிப்பது, நீட் தேர்வு ரத்து, வேளாண் சட்டம் ரத்து உள்ளிட்ட 25 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பிரதமருடனான சந்திப்பு மனநிறைவை தரும் சந்திப்பாக இருந்ததைத் தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழக மேம்பாட்டு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இன்று கூட்டணி கட்சியான காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை, காலை 9.50 மணியளவில் ஜன்பத் சாலையில் உள்ள வீட்டில் தமது மனைவியுடன் சந்தித்தார். இதில், தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சோனியா காந்தி, அரசியல் நிலவரங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். 

மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பது தொடர்பாக சரத்பவார், மம்தா பானர்ஜி எடுக்கும் முயற்சிகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, வளமான மற்றும் வலுவான தமிழகத்தை உருவாக்க திமுகவுடன் சேர்ந்து பாடுபடுவோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் உடனான உறவு முத்தமிழறிஞர் கலைஞர் காலந்தொட்டே தொடரும் உறவு என்றும், நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் விமான நிலையம் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகலில் சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும், இதன் மூலம் அவர் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளாதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன.