களைகட்டிய தமிழ் புத்தாண்டு.. பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

களைகட்டிய தமிழ் புத்தாண்டு.. பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

தமிழ் புத்தாண்டையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையில், திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த சூரியனார் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.    தமிழ் புத்தாண்டான இன்று காலை 6.20 மணிக்கு சூரிய பகவானின் ஒளிக்கதிர் மூலவர் புஷ்பரதேஸ்வரர் காலடியில் பட்டது. தொடர்ந்து சொர்ணாம்பிகை தாயாரின் காலடியில் சூரியனின் ஒளிக்கற்றைகள் விழுந்தது. இந்த அபூர்வ காட்சியை அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ஓம் நமச்சிவாய கோஷத்துடன் கண்டு பரவசம் அடைந்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி, புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.