பக்காவா வேலையை முடிச்சிட்டு வந்த சிறப்பு குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளித்த முதல்வர்!!

உக்ரைன் எல்லையில் எஞ்சியிருந்த தமிழக மாணவர்களுடன், திருச்சி சிவா தலைமையிலான குழு சென்னை வந்தடைந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

பக்காவா வேலையை முடிச்சிட்டு வந்த சிறப்பு குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளித்த முதல்வர்!!

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நீடித்து வருகிறது. இதனால் அங்கிருந்து வெளியேறி உக்ரைன் எல்லை நாடுகளில் தவிக்கும் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

இந்தநிலையில் அங்கு தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்கும்படி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தலைமையிலான குழுவை தமிழக அரசு ஏற்படுத்தியது. இந்த குழு மீட்பு பணியை துரிதப்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்தியதோடு, டெல்லியில் முகாமிட்டு, தமிழக மாணவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வந்தது.

அதன்படி மத்திய அரசின் ஆபரஷேன் கங்கா திட்டத்தின் கீழ் தற்போது வரை ஆயிரத்து 860 மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். இந்தநிலையில் உக்ரைன் எல்லை நாட்டிலிருந்து போர் விமானத்தில் டெல்லி வந்த தமிழக மாணவர்கள் 9 பேர் இன்று திருச்சி சிவா தலைமையிலான குழுவுடன்  சென்னை வந்தடைந்தனர்.

அவர்களை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர்களிடம் உக்ரைன் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழக மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பியதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, உக்ரைனிலிருந்து மன அழுத்தத்துடன் நாடு திரும்பிய மாணவர்களை டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் ஓய்வெடுக்க செய்து, ஆறுதல் கூறி தனி விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.