அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்பு...

தென்மேற்கு பருவமழையானது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்பு...

வெப்பச்சலனம் மற்றும் தமிழ்நாட்டின் தென் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் கர்நாடகா முதல் தென் தமிழ்நாடு வரையில் நிலவும் வளிமண்டல சுழற்சிகளின் காரணமாக, இன்று புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய, கன முதல் மிக கன மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால் வரும் 7ஆம் தேதி வரையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யகூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.