அம்மாவின் "இசை" காற்றில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது... தமிழிசையின் உருக்கமான பதிவு...

காதில் ஒலித்த அந்த "இசை" காற்றில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது என்று தமிழிசை சௌந்தரராஜன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அம்மாவின் "இசை" காற்றில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது... தமிழிசையின் உருக்கமான பதிவு...

மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் திருமதி.கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைந்து 16 ஆம் நாள் சடங்கை நடத்திய பின்பு தனது தாயாரின் நினைவுகளை முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அம்மாவின் 16 ஆம் நாள்  சடங்கை தெலுங்கானா ராஜ்பவனில் நடத்தினோம் ...

16 நாட்களுக்கு முன்பு இருந்த அம்மா இன்று இல்லை 
"இசை " .... "இசை" ...."இசை"... என்றுதான் என்னை அம்மா அழைப்பார்கள்.எங்கு திரும்பினாலும்  "இசை" என்று  என்னை அழைப்பது போலவே இருக்கிறது. ஒவ்வொருமுறை தெலுங்கானா ராஜ்பவன் செல்லும் போதும் அம்மாவிற்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று பாசத்துடன் பிடித்ததை கைநிறைய வாங்கிச்செல்வேன்...

ஆனால் இன்று அம்மாவிற்கு பிடித்ததை அம்மாவின் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு வந்து இருக்கின்றேன். பாசத்துடன் அம்மாவிற்கு பிடித்ததை கைநிறைய வாங்கிச்செல்லும் நான் இன்று அம்மாவின் படத்திற்கு படைத்துவிட்டு  வெறுமையுடன் வந்து இருக்கின்றேன்.

குடும்பத்தில் அனைவரும் கலகலப்பாக இருந்தால் அம்மாவிற்கு பிடிக்கும். இன்று எல்லோரும் இருந்தோம் ஆனால் அதை கண்டு ரசிக்க அம்மா இல்லை.

என்னை "பெத்த" அம்மாவை தெலுங்கானா ராஜ்பவன் ஊழியர்கள் அனைவரும் தெலுங்கில் பெத்தம்மா பெத்தம்மா (பெரியம்மா) என்று அழைப்பார்கள். அவர்களுக்கு அன்புடன் எதை கொடுத்தாலும் அம்மாவிற்கு பிடிக்கும்.

இன்று அம்மாவின் நினைவாக ராஜ்பவன் குடும்பமே அவர்கள் படத்திற்கு முன்னால் நிற்கிறது...பார்த்து மகிழ்வதற்கு அம்மா இல்லை... 

அம்மா ராஜ்பவன் ஊழியர்களின் பெயரை ஒவ்வொருவரின் பெயரை சொல்லி அவருக்கு அதை கொடு இவருக்கு இதை  கொடு என்பார்கள். இன்று அம்மாவின் நினைவாக அனைவருக்கும் உணவளித்தோம் ...உடையளித்தோம்...பணமளித்தோம் ... அளித்ததை கண்டு மகிழ்வதற்கு அம்மா இல்லை...

அம்மா விரும்பி மெதுவாக நடக்கும் ராஜ்பவன் தோட்டத்தில் படையலுக்காக நாங்கள் நடந்தோம்... எங்களுடன் நடக்க அம்மா இல்லை...

ராஜ்பவன் தோட்டத்து மயில்களும்,புறாக்களும் நாங்கள் கொடுக்கும் தானியங்களை உண்டால் அதை கண்டு அம்மா மகிழ்ந்து போவார்கள்.. .இன்று உங்கள் நினைவாக தானமாக வைத்ததை மயில்களும்,புறாக்களும் சாப்பிடுகின்றன அதை கண்டு மகிழ்வதற்கு அம்மா இல்லை...

அழ அழ "இசை" எப்போதும் அழக்கூடாது என்று அம்மா சொல்லும் குரல் கேட்கின்றது. தங்கைகளும், தம்பியும் அழுவதை பார்த்து அழுகிறார்கள். ஆனால் "இசை" நீ எல்லோரையும்விட பெரியவள் அவர்களை அழ வைக்கக்கூடாது  என்று அம்மா சொல்வதும்  கேட்கிறது.
 
பணியாளர்களையும், ஊழியர்களையும் பார்க்க பார்க்க "இசை" அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என்று சொன்ன அம்மாவின் குரலும் கேட்கின்றது.

அம்மாவிற்கு பிடித்ததையெல்லாம் படைக்க படைக்க "இசை" நீ சாதனை படைக்க வேண்டும் என்ற அம்மாவின் குரலே ஓங்கி கேட்கிறது.

"இசை".... "இசை".... என்று நீங்கள் அன்று அழைத்தது காதில் ஒலித்தது ... இன்று அந்த "இசை காற்றில் ஒலிக்கிறது.

உங்களுக்கு விரும்பியதை மட்டும் நான் இன்று படைக்கவில்லை ... நீங்கள் விரும்பிய சாதனையையும்  படைப்பேன் என்ற உறுதியோடு உங்கள் விருப்பப்படியே சடங்குகளை முடித்துவிட்டு தெலுங்கானா அலுவல் வேலைகளையும் முடித்துவிட்டு அம்மாவுக்கு பிடித்த அம்மாவாரு கோவிலுக்கு சென்றோம்...

அங்கேயும் அம்மா வருவாரா என்று கண்கள் தேடுகிறது. தெலுங்கானாவிலிருந்து  புறப்பட்டு  48 மணி நேர தொடர் தடுப்பூசி திருவிழாவினை புதுச்சேரியில் தொடங்கி வைக்க புறப்பட்டேன்.

காதில் ஒலித்த அந்த "இசை" காற்றில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது... "இசை" ....  "இசை" ..... "இசை"....

இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.