ஆதரவற்றோர் இல்லத்தில் நடக்கும் மர்மங்கள்... காசுக்கு இரையாகும் பச்சிளம் குழந்தைகள்..  அதிர்ச்சி தரும் தகவல்கள்...

மதுரையில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த ஒரு வயது பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி போலியான ஆவணங்கள் மூலம் மயானத்தில் புதைத்து நாடகமாடிய தனியார் தொண்டு நிறுவனம் - காவல்துறை வாக்குப்பதிவு செய்து விசாரணை.

ஆதரவற்றோர் இல்லத்தில் நடக்கும் மர்மங்கள்... காசுக்கு இரையாகும் பச்சிளம் குழந்தைகள்..  அதிர்ச்சி தரும் தகவல்கள்...
மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் தனியார் முதியோர் ஆதரவற்ற இல்லத்தினை தனியாத் அறக்கட்டளையின் நிறுவனரான சிவகுமார் என்பவர் நடத்தி வருகிறார் இங்கு 100க்கும் மேற்பட்ட சாலையோர வசிக்ககூடிய ஆதரவற்ற முதியோர்களை மீட்டு பராமரித்துவருகின்றனர். 
 
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சேக்கிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆதரவற்ற மனநலம்குன்றிய ஐஸ்வர்யா என்ற  இளம்பெண் அவரது பெண் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகளுடன் அனுமதித்துள்ளனர்.
 
இதனிடையே ஐஸ்வர்யாவின் மூன்றாவது குழந்தையான மாணிக்கம் என்ற ஒரு வயது ஆண் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மதுரை நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 11-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து  குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறி 13ஆம் தேதியன்று மதுரை அரசு ராஜாஜி கொரோனா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என  நகர்புற மருத்துவமனை பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளனர். 
 
இதனை பெற்றுகொண்ட தொண்டுநிறுவனத்தினர் குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதிக்காத நிலையில் 16நாட்களுக்கு பின் திடீரென இன்று காலை கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி தத்தனேரி மயானத்தில் புதைத்துள்ளனர். அதன் பின்னரே தாயார் ஐஸ்வர்யாவை அழைத்துசென்று குழந்தையை புதைத்துவிட்டதாக கூறி இறுதிசடங்கு நடத்தவைத்து தொண்டு நிறுவனத்தினர் புகைப்படம் எடுத்துவிட்டு தாயாரை முகாமிற்கு அழைத்துசென்றுள்ளனர்.
 
இதனையடுத்து ஐஸ்வர்யாவை இல்லத்தில் சேர்த்துவிட்ட சமூக ஆர்வலர் குழந்தையை அடக்கம்செய்த புகைப்படத்தை பார்த்தநிலையில் குழந்தையை இறந்தது குறித்து தொண்டுநிறுவனத்திடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக கூறியதையடுத்து குழந்தையை புதைத்தது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது அவர்கள் அளித்த ஆவணங்கள் முழுவதும் போலியாக இருப்பதாக சமூக ஆர்வலர் அளித்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மாவட்ட குழந்தை நல அலுவலர், வட்டாச்சியர், காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
 
முதற்கட்ட விசாரணையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் முகாமில் இல்லை என வருகை பதிவேட்டில் பதிவிட்ட நிலையில் கடந்த 16 நாட்களாக குழந்தையை தலைமறைவாக வைத்திருந்ததுள்ளனர். இதையடுத்து இன்று காலை கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி தத்தனேரி மயானத்தில் புதைத்துள்ளனர். 
 
மேலும் முதியோர் இல்லம் என்ற நிலையில் அங்கீகாரம் இன்றி குழந்தைகளை தங்கவைத்ததும் அதில் சில குழந்தைகளை காரணம் இன்றி திடீரென காணாமல் போனது போன்ற முன்னுக்கு பின் தவறான பதிவிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
 
போலியான ஆவணங்களை பயன்படுத்தி மனநலம்குன்றிய பெண்ணின் குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில் விசராணையை தீவிரப்படுத்தினால் குழந்தைகள் தொடர்பான பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
 
கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்படும் குழந்தை உண்மையில் இறந்து புதைக்கப்பட்டாரா இல்லையனில் வேறு ஏதேனும் குழந்தையை புதைத்தனரா என்பதை விசாரணை நடத்தும் வகையில் உடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் முகாமில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
புகாருக்கு ஆளாகிய தனியார் அறக்கட்டளையை சேர்ந்த நபர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிறந்த இளைஞர் சமூக சேவைக்கான தமிழக அரசின் விருது வழங்கப்பட்டதோடு பல்வேறு அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடமும் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
 
இதனிடையே இது தொடர்பாக அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமாரை தொடர்பு கொண்டபோது அவரது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிய நிலையில் சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவுசெய்த  தல்லாகுளம் காவல்துறையினர் நிறுவனரை தேடி வருகின்றனர்.