அறப்போர் இயக்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த செந்தில் பாலாஜி...!

அறப்போர் இயக்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த செந்தில் பாலாஜி...!
Published on
Updated on
1 min read

டெண்டர் விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிட்டால் அறப்போர் இயக்கம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு எடுத்து செல்லும் போக்குவரத்து டெண்டர்கள் மண்டல ரீதியாக 43 டெண்டர்கள் கிட்டதட்ட 1000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த டெண்டர்கள் அனைத்தும் ஈ டெண்டர்களாக போடப்படாமல் பாக்ஸ் டெண்டர்களாக போடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியவர், இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அறப்போர் இயக்கத்தின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ளார். அதில், மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான -  உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறப்போர்  இயக்கம் வெளியிட்டிருப்பதாகவும், விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக அறப்போர் இயக்கம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com