மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் "விரைவில் மாற்றம்"! 

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் "விரைவில் மாற்றம்"! 

அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து மூத்த ஐ. ஏ.எஸ் அதிகாரிகளும் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் கடந்த சில மாதங்களாகவே, தொடர் சர்ச்சையில் சிக்கி வந்தனர். இதனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி, தமிழ்நாட்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அமைச்சர் பட்டியலில் புதிதாக இணைந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் நாசர் அப்பொருப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து மூத்த ஐ. ஏ.எஸ் அதிகாரிகளும் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தகவலின்படி, முதலமைச்சரின் தனி செயலாளர் உட்பட சில முக்கிய துறைகளின் ஐ. ஏ.எஸ்.அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உள்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளில் மாற்றம் இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராக இருக்கும் அமுதா, உள்துறைச் செயலாளராகவோ அல்லது முதலமைச்சரின் தனி செயலாளராகவோ மாற்றப்பட அதிகம் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அமுதா நிர்வகித்து வந்த ஊரக வளர்ச்சித்துறை  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது.

இவரைத் தொடர்ந்து, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் நிதித்துறைச் செயலாளராக மாற்றப்படலாம் என தெரிகிறது. தற்போது நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றிருக்கும் நிலையில்தான் இந்த மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு தற்போது நிதித்துறைச் செயலாளராக இருக்கும் முருகானந்தம் அல்லது அமுதாவை நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், தற்போது தலைமைச் செயலாளராக பதவி வகித்து வரும் இறையன்பின் பதவிக்காலம் விரைவில் முடிவடையுள்ள நிலையில், சிவதாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பல துறை செயலாளர்கள் மாற்றப்படுவதோடு, இரண்டு ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க:அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் அதிரடி மாற்றம்...!