4133 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு: 106 புதிய அறிவிப்பு - மா.சுப்பிரமணியன்

4133 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு: 106 புதிய அறிவிப்பு - மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 106 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 106 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

திருவொற்றியூர், கீழ்பாக்கம், கன்னியாகுமரி, கடலூர் - சிதம்பரம் ஆகிய நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ரூ.95 கோடியில் நிறுவப்படும். இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ரூ.40.05 கோடியில் நிறுவப்படும்.

108 அவசர கால ஊர்திகளின் சேவையை வலுப்படுத்த ரூ.21.40 கோடியில் 62 புதிய அவசர கால ஊர்திகள், 13 தாய் சேய் நல ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவ கருவிகள் வழங்கப்படும்.

11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நவீன நரம்பியல் அறுவை சிகிச்சைகள் உபகரணங்கள் ரூ.8.80 கோடியில் வழங்கப்படும். செங்கம் அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான உபகரணங்களுடன் கூடிய கட்டம் அமைக்கப்படும். அத்தியாவசிய மற்றும் சிறப்பு மருந்துகளுக்கு ரூ.25 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து அரசு மருத்துவ மையங்களில் ஆய்வக சேவைகள் ரூ.185.24 கோடியில் மேம்படுத்தப்படும்.50 வட்டாரங்களில் வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டங்கள் ரூ.40.44 கோடியில் கட்டப்படும்.

மேலும் படிக்க | இன்று பில்கிஸ் பானு, நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

அனைத்து துணை சுகாதார நிலையங்களில் மக்கள் நலவாழ்வு குழு ஏற்படுத்தப்படும்.

29 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ. 161.20 கோடியில் கட்டப்படும்.

சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூ.146.52 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

200 புதிய நகர்புற துணை சுகாதார நிலையங்கள் ரூ.80 கோடியில் கட்டப்படும்.

பாதுகாப்பான மகப்பேறு மற்றும் சுகப்பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில் மகப்பேறு செவிலியர் வழிநடத்தும் பராமரிப்பு மற்றும் பயிற்சி பிரிவு உருவாக்கப்படும்.

இல்லங்களிலேயே இளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு சேவைகள் செயல்படுத்தப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சுய இரத்த சுத்திகரிப்புக்கான CAPD Bags ரூ.3.01 கோடியில் கூடுதலாக வழங்கப்படும். பள்ளி மாணவர்களின் வாய் மற்றும் பல் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் புன்னகை திட்டத்தின் கீழ் Pit and Fissure Sealant சிறப்பு சேவைகள் வழங்கப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவியெலும்பு அறுவை திறன் ஆய்வகம் ரூ.2.40 கோடியில் நிறுவப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவுகளின் நுழைவு வாயிலில் வைட்டல்ஸ் பே என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கு தனி அறை அமைத்துத் தரப்படும். மலைவாழ் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் 10 பகுதிகளில் நடமாடும் சித்த மருந்தகங்கள் ரூ.94.25 லட்சம் செலவில் தொடங்கப்படும். தினசரி நாளிதழ்களில் உணவை பொட்டலம் செய்வதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அன்றாட உணவு முறைகளில் சிறுதானிய உணவு வகைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் வருங்காலங்களில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராயய்ச்சி இயக்ககம் என்ற பெயரில் செயல்படும்.


தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4133 காலிப் பணியிடங்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர். அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்றி (Health Walk) 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்படும். கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள 2286 அரசுஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்படும்.