கால்களின் அடிப்பாதங்களில் மறைத்து கடத்தி வந்த தங்கப்பசை பறிமுதல்.!!

கால்களின் அடிப்பாதங்களில் ஒட்டவைத்து கடத்தி வந்த தங்கப்பசையை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கால்களின் அடிப்பாதங்களில் மறைத்து கடத்தி வந்த தங்கப்பசை பறிமுதல்.!!

சார்ஜாவில் இருந்து சவுதி அரேபியன் பயணிகள் விமானம் முலம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது  சென்னையை சேர்ந்த ஆண் பயணி ஒருவா், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் எந்த பொருட்களும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். 

அந்த பயணியின்  நடை சற்று வித்யாசமாக இருந்தது. கால்களில் அணிந்திருந்த செருப்புகளை இழுத்து இழுத்து நடந்தாா். இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. 

எனவே அவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து, அவரின் செருப்புகளை கழற்றி சோதனையிட்டனா். ஆனால் செருப்புகளில் எதுவும் இல்ல.ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் அவருடைய இரண்டு கால்களையும் தூக்கிப் பார்த்தனா்.

2 கால்களின்  அடிப்பாதங்களில் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரித்து பாா்த்தபோது, உள்ளே தங்கப்பசை அடங்கிய சிறிய பாா்சல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.