சக மாணவர்களை ராகிங் செய்த பள்ளி மாணவர்கள்... வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு!!

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ராகிங் செய்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், அடுத்த மாதம் நான்காம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சக மாணவர்களை ராகிங் செய்த பள்ளி மாணவர்கள்...   வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு!!

திருவண்ணாமலை மாவட்டம்  செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் வகுப்பறையிலேயே மாணவர்களை நடனம் ஆட வைத்தும், இருக்கையில் அமர்ந்து கொண்டு இருக்கும் மாணவருக்கு மற்ற மாணவர்களை விசிறி மூலம் விசிற வைத்தும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ராகிங் செய்தனர்.

அப்போது நடனம் ஆடாத மாணவர்களையும், விசிறியை சரியாக வீசாத மாணவர்களையும் அவர்கள் தாக்கினர். இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து விசாரித்த தலைமை ஆசிரியர் காமத், மாணவர்கள் 5 பேரை இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களிடம்  விசாரணை செய்தார். இதனிடையே அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.