எத்தனை பொய்கள் பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி பழனிசாமி விளாசல்  

சசிகலா அதிமுகவில் இருந்த போதும் கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாகவும் எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது என  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எத்தனை பொய்கள் பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி பழனிசாமி விளாசல்   

சிறையில் இருந்து வெளிவந்தவுடன் சற்று ஓய்வு எடுத்துக்கொண்ட சசிகலா கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வரும் சசிகலா, தான் இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று கூறி வருகிறார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் அதிமுக சார்பில் துப்புரவு பணியாளர்கள் 100 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,'கர்நாடகா தற்போது மேகதாது அணை கட்டுவதாக தெரிவித்து வருகிறது. இது கண்டனத்துக்குரியது.அவர்கள் அணை கட்டி விட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்  என கூறினார்.

மூன்றாவது அலை வரும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனால் விழிப்புடன் இருந்து போதிய அளவு தடுப்பூசி பெற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.

சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார் என்றும் எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அவரால் அதிமுகவை வீழ்த்த முடியாது என பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆருக்கே அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறுகிறார் சசிகலா. அவர் அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் அவர் யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை என விமர்சனம் செய்தார்.உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. அதிமுக தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.