பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள்..! புத்தகம் வெளியீடு...!

பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள்..! புத்தகம் வெளியீடு...!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமனியன் கலந்துக்கொண்டார்.

10 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் :

இந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்ட அமைச்சர் மா. சுப்ரமனியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக 600 - க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது என கூறினார். மேலும் பேசிய அவர், தமிழகத்தை பொருத்தவரை தினந்தோறும் டிஎம்எஸ், டிஎம்இ, டிபிஎச் போன்ற மூன்று துறைகளிலும் ஏறக்குறைய 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. இந்த அறுவை சிகிச்சைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பான அறுவை சிகிச்சை முறைகள் தொடர்பாக இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாக கூறினார். 

‘சேஃப் சர்ஜரி ப்ரொடொகால் அண்ட் செக்லிஸ்ட்’ - புத்தகம் :

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் 5000 - க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்டம் தோறும் இது போன்ற கருத்தரங்கம் நடத்தி அந்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவிக்க இருப்பதாகவும் ‘சேஃப் சர்ஜரி ப்ரொடொகால் அண்ட் செக்லிஸ்ட்’ என்ற புத்தகமும் இன்று வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த புத்தகத்தில், அறுவை சிகிச்சைக்கான நெறிமுறைகள் குறித்து அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு ஒரு கையேடாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. ஓரிரு வாரங்களில் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த புத்தகத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

தணிக்கை குழு :

அறுவை சிகிச்சையில் ஏற்படும் இறப்புகளின் காரணங்கள் குறித்து தணிக்கை செய்ய இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நான்கு இடங்களில், அதாவது மதுரை, கோவை, திருச்சி, சென்னை ஆகிய நான்கு மண்டலங்களிலும் தணிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு குழுவிலும் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ நிபுணர், மயக்கவியல் நிபுணர், எலும்பு சிகிச்சை நிபுணர் என 4 உயர் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் ஆகியோரை இந்த குழுவில் இடம் பெறச் செய்து இந்த தணிக்கை குழு அமைய உள்ளது என்றார். மேலும், அறுவை சிகிச்சைக்கு முன்னும், அறுவை சிகிச்சையின் போதும், அறுவை சிகிச்சைக்கு பிறகும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கையாள்வது குறித்தும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படுள்ளதாக தெரிவித்தார். 

உயிரோட்டமான அமைப்பு :

மெட்ராஸ் ஐ பாதிப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த பாதிப்பு மூன்றில் இருந்து ஐந்து நாள் வரைக்கும் தான் இருக்கும், இந்த பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு தான் மருந்து உபயோகிக்க வேண்டும் என்றார். அதேபோல, பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 11 மாதத்தில் டெங்கு பாதிப்பினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். பின்னர் உதயநிதி குறித்த கேள்விக்கு, இளைஞர் அணி செயலாளர் ஆக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றி இருக்கிறார், இளைஞர் அணிக்காக தொடர்ந்து பணியாற்றி வந்தவர். தற்போது 30 லட்சத்தையும் கடந்து ஒரு உயிரோட்டமான அமைப்பாக இளைஞர் அணி உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிக்க : வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவுடன் 11 வது ஆண்டு பயணத்தை துவங்கும் ‘ஜுவல் ஒன்’..