கள்ளச்சாராய பலி; பாஜகவினர் இன்று ஆா்ப்பாட்டம்!

கள்ளச்சாராய பலி; பாஜகவினர் இன்று ஆா்ப்பாட்டம்!

கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக சாா்பில் இன்று கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், அந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல என்றும் தொழிற்சாலையில் இருந்து திருடி, விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் என்ற விஷச் சாராயம் என்றும் போலீஸ் டி. ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 20-ம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக தலைவா் அண்ணாமலை அறிவித்திருந்தாா். அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:"கள்ளச்சாராய மரணம்" விரிவான அறிக்கை கேட்கும் ஆளுநர்!