எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் வீட்டில் சோதனை...  83 சவரன் தங்கம், 3.7 கிலோ வெள்ளி பறிமுதல்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 83 சவரன் தங்க நகை, மூன்றரை கிலோ வெள்ளி மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் வீட்டில் சோதனை...  83 சவரன் தங்கம், 3.7 கிலோ வெள்ளி பறிமுதல்...

புதுக்கோட்டை மாவட்டம் வெத்தன்விடுலி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளராக பணிபுரிந்த நிலையில், திடீர் பணிமாறுதல் காரணமாக விருப்ப ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளராக இருந்து முருகானந்தம் உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஒப்பந்தங்கள் பெற்று பணி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முருகானந்தத்தின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது சகோதரர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டி. எஸ்.பி. இமயவர்மன் தலைமையில் திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 83 சவரன் தங்க நகைகள், மூன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.