அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி, வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு ஆளும் கட்சி நிர்வாகிகள் மிரட்டல்...

கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி, வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி, வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு ஆளும் கட்சி நிர்வாகிகள்  மிரட்டல்...

கன்னியாகுமரி மாவட்டம் நரிப்பாலம் எனும் சிறிய கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வாழ்வதற்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதியும், அங்கு இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மிக முக்கிய தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவை இல்லை எனக்கூறும் அப்பகுதி மக்கள், குடிநீர் எடுத்து வர, 1 கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

ரேஷன் கார்டு கேட்டு சுமார் ஆறு மாதங்களாக தாலுகா அலுவலகம் சென்று வருவதாகவும், ஆனால் அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாகவும் கூறுகின்றனர். தங்கள் கிராம மக்களின் மனவேதனையை  சுபலா என்ற பெண் எடுத்து கூறி,   வீடியோ பதிவிட்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ சில மணி நேரத்தில் ட்ரெண்டிங் ஆக, அப்பெண்ணிற்கு ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான சுபலா, தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்றிருப்பதாக தெரிகிறது.