பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை.. ரூ.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் ஓடிந்து சேதம் - விவசாயிகள் வேதனை

பெரியகுளம் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையினால்  50 லட்சம் ரூபாய்  மதிப்பிலான  வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை.. ரூ.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் ஓடிந்து சேதம் -  விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள  லட்சுமிபுரம், வடபுதுப்பட்டி, கோம்பைக்காடு  உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடவு செய்யப்பட்ட வாழைகள் பாதி விளைச்சல் மற்றும் பிஞ்சு காய்களுடன் இருந்தது.

இந்த நிலையில் பலத்த சூறாவளி காற்றுடன்  பெய்த  கனமழையினால்   வாழை மரங்கள் அனைத்தும் உடைந்து சேதம் அடைந்துள்ளது.

பிஞ்சு பருவத்தில் உள்ள வாழைகள் அனைத்தும் சூறாவளி காற்றில் ஒடிந்து சேதமடைந்துள்ளதால் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதைனை தெரிவித்தனர். இயற்கை சீற்றத்தினால் வாழை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே கொடைக்கானலில் இரண்டு மணி நேரமாக  கனமழை வெளுத்து வாங்கியது. கொடைக்கானலில்  கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் காலை முதலே  வெயிலின் தாக்கம் குறைந்து நிலையில் லேசான மேகமூட்டம் நிலவி வந்தது.

திடீரென்று அங்குள்ள ஏரி சாலை, கலையரங்கம் பகுதி, ஆனந்தகிரி,நாயுடுபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  2  மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.   தொடர் மழையின் காரணமாக சாலைகளில்  தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  மேலும்  மழை காரணமாக கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். .