சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்: சசிகலா வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

சிறையில் சசிகலா சொகுசு வசதிகள் பெற அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம்:  சசிகலா வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் சசிகலா சிறைவாசம் அனுபவித்த போது, அவருக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவாகி 4 ஆண்டுகள் ஆகியும், இதுவரை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கைமாறியது தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா காரணமாக இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தாமதமாகி உள்ளது என்றும், அதற்காக காலஅவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு சம்பந்தப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை இன்னும் 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.