ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தபால் நிலைய ஊழியரின் தோட்டத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த எஸ். வாழவந்தி ஊராட்சிக்குட்பட்ட கே. ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் கே.புதுப்பாளையத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு சொந்தமான 90 சென்ட் நிலம் கே.ராசாம்பாளையம் சூரியன்பாறை அருகே உள்ளது. 

அதில் அவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக 97 சந்தன மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். இந்த மரங்கள் நட்டு 16 ஆண்டுகள் ஆவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை தர்மலிங்கத்தின் தாய் ராசம்மாள் அந்த தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு 27 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் சில சந்தன மரங்களில் அதை அறுத்ததற்கான அடையாளம் இருந்தது.

பின்னர் இதுகுறித்து பரமத்திவேலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், அந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

 ச்