காதல் ஜோடிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி: காதலி இறந்ததால் காதலன் வீட்டை அடித்து சூறையாடிய உறவினர்கள்...

திருப்பத்தூர் அருகே காதல் ஜோடிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில் காதலி உயிரிழந்ததால் ஆவேசமடைந்த  உறவினர்கள் காதலன் வீட்டை அடித்து சூறையாடியதால்  பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

காதல் ஜோடிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி:  காதலி இறந்ததால் காதலன் வீட்டை அடித்து சூறையாடிய  உறவினர்கள்...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. ஆட்டு வியாபாரி இவருடைய மகள் ஸ்ருதியும் அதே பகுதியை சேர்ந்த  பிரசாந்த்தும்  கடந்த  ஓராண்டாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் தரப்பில் கடும் எதிர்ப்பு  கிளம்பியது.எனினும் பெற்றோரின் எதிர்ப்பை  மீறி  வீட்டை விட்டு வெளியேறிய காதல்  ஜோடி திருமணம் செய்து கொண்டதால் இவர்களை  வீட்டில் சேர்க்காமல்  விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காதல் ஜோடி  விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இருவரும் மயங்கிய நிலையில் உள்ளதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை  மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி  ஸ்ருதி உயிரிழக்க, காதலன்  பிரசாந்த் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை அறிந்த ஸ்ருதியின் உறவினர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பிரசாந்தின்  வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியதால்  பெரும் பரபரப்பு  நிலவி வருகிறது.இதனிடையே   இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி  சமாதானப்படுத்தினர்.  தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.