மின் மோட்டார்கள் ,பித்தளை குழாய்களை திருடி விற்பனை செய்த கொள்ளையர்கள் கைது

சென்னை பல்லாவரம் அருகே பித்தளை குழாய்களை திருடி விற்பனை செய்து, மதுகுடித்து வந்த  கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மின் மோட்டார்கள் ,பித்தளை குழாய்களை திருடி விற்பனை செய்த கொள்ளையர்கள் கைது

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பொருத்தப்பட்ட, பித்தளை குழாய்கள்,மின் மோட்டர்கள் அடிக்கடி திருடு போவதாக அப்பகுதி பொதுமக்கள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் அருண், பரமசிவம்  மற்றும் சிலம்பரசன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் மூன்று பேரும் சேர்ந்து காமராஜபுரம் பகுதியில் உள்ள இரும்புகடைக்கு சென்று மது குடிப்பதற்காக பணம் கேட்டதாகவும், அதற்கு கடைக்காரர் சும்மா பணம் தரமுடியாது பழைய பொருட்களை எடுத்து வாருங்கள் பணம் தருகிறேன் என கூறியதாக சொல்லப்படுகிறது.

அதனைதொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து பம்மல் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் மற்றும் பித்தளை குழாய்களை திருடி விற்று வந்த பணத்தில் மது குடிப்பதும் கஞ்சா புகைத்து வந்ததும்  தெரியவந்தது.

அதன் பின்னர் திருடிய பொருட்களை வாங்கியதற்காக இரும்பு கடை வியாபாரியான வினோத் (எ) அந்தோணி என்பவரையும் கைது செய்த போலீசார்,  4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.