அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் 57 ஏக்கர் நிலத்தில் சாலை...உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில்  57 ஏக்கர் நிலத்தில் சாலை...உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Published on
Updated on
1 min read

குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் அடர்ந்த வனப்பகுதி மத்தியில் யானை வழித்தடத்தை அழித்து சுமார் 57 ஏக்கர் நிலத்தில் அனுமதியின்றி சாலை அமைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீப காலமாக, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் அழிக்கப்பட்டதால், சாலைகள், குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கிறது. இதேபோன்று மேட்டுபாளையம் - குன்னூர் வனப்பகுதிகள் அருகே யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கு வரும் யானைகள் எண்ணிக்கை அதிகரித்து உயிரிழப்புகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குரும்பாடி பழங்குடியின கிராமம் உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளதால் யானைகள் மற்றும் வன விலங்குகள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றன.  இங்கு  தனியார் சிலர் உரிய அனுமதியின்றி சுமார் 57 ஏக்கர் நிலத்தில் பொக்லைன் பயண்படுத்தி  யானை வழித்தடத்தை அழித்து சாலை அமைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அடர்ந்த வனப்பகுதியை காட்டு தீ வைத்து அழித்து நூற்றுக்கும் மேற்பட்ட  அரிய வகை மரங்களான மா,பலா, ஈட்டி மற்றும் சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். மேலும், யானைகள் வழித்தடத்தை அழித்ததால் யானைகள் சென்று வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.  

எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனுமதியின்றி யானை வழித்தடத்தை அழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com