அதிமுகவில் தொண்டர்களை ஒருங்கிணைக்க புரட்சி பயணம்.. அரசியல் சுற்று பயணத்தை தொடங்கிய சசிகலா!!

அதிமுகவில் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக குறிப்பிட்ட சசிகலா, தமிழக மக்களுக்கு அதிமுக ஆட்சியை நிச்சயம் அளிக்கப் போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தொண்டர்களை ஒருங்கிணைக்க புரட்சி பயணம்.. அரசியல் சுற்று பயணத்தை தொடங்கிய சசிகலா!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே உச்சகட்ட மோதல் நிலவுகிறது.

இந்நிலையில் அதிமுகவில் தொண்டர்களை ஒருங்கிணைக்க உள்ளதாக கூறி, புரட்சி பயணம் என்ற அரசியல் சுற்று பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்ற அவர், முதல்முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக தொண்டர்களை சந்தித்தார். பின்னர் திருத்தணி சென்ற அவருக்கு,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் ஏற்பாட்டில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள், தொண்டர்கள், கலந்து கொண்டு மலர்கள் தூவி, பட்டாசு வெடித்து, மோட்டார் சைக்கிள் பேரணி யுடன் வரவேற்பு அளித்தனர்.

பின்பு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சசிகலா, திருத்தணி முருகன் கோவிலில்  சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் திருக்கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அவருக்கு, நரிக்குறவ பெண்கள் பாசி மாலையை அன்பளிப்பாக வழங்கினர்.

அதனை கழுத்தில் அணிந்துகொண்ட சசிகலா, தொண்டர்களுக்கும் நரிக்குறவ குழந்தைகளுக்கும் சாக்லெட்டுகளை வாரி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுற்றுப் பயணத்தில் தன்னை சந்தித்த மக்கள் இந்த திமுக ஆட்சியில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியதாக குறிப்பிட்டார். அதிமுகவில் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக குறிப்பிட்ட சசிகலா, தமிழக மக்களுக்கு அதிமுக ஆட்சியை நிச்சயம் அளிக்கப் போவதாக நம்பிக்கை தெரிவித்தார்.