கொரோனாவால் இறந்துவிட்டதாக கூறி நாடகம்.. ஒரு வயது குழந்தையை விற்ற முதியோர் இல்லம்

மதுரையில், முதியோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு வயது குழந்தை கொரோனாவால் இறந்து விட்டதாகக் கூறி புதைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழந்தை விற்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . 
கொரோனாவால் இறந்துவிட்டதாக கூறி நாடகம்.. ஒரு வயது குழந்தையை விற்ற  முதியோர் இல்லம்
Published on
Updated on
1 min read

மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் சிவகுமார் என்பவர், முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்.  ஆதரவற்றவர்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தனியார் இல்லத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் மனநலம் பாதித்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண், அவரது 3 குழந்தைகளுடன் தங்கவைக்கப்பட்டார். 

இந்தநிலையில் ஐஸ்வர்யாவின் 3வது குழந்தையான ஒரு வயது மாணிக்கத்திற்கு கடந்த 11ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணிக்கம் நரிமேடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. 

இதனிடையே குழந்தைக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், குழந்தையை உடனே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்து  ஆரம்ப சுகாதார மையம் கடிதம் எழுதியிருந்தது. 

ஆனால் அதன்பின் குழந்தை அங்கு அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று திடுதிப்பென, குழந்தை இறந்துவிட்டதாக கூறி இல்ல நிர்வாகிகள், தாய் உதவியுடன் இறுதிச்சடங்குகளை செய்து தத்தனேரி மயானத்தில் புதைத்துள்ளனர். மேலும் அதனை புகைப்படம் எடுத்து, பெண்ணை இல்லத்தில் சேர்த்த சமூக ஆர்வலருக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த அவசர நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த நபர், முதியோர் இல்லத்துக்கு நேரில் வந்து வினவியுள்ளார். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அது தொடர்பாக அவர்கள் அளித்த ஆவணங்களும் போலி என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இல்லத்திற்கு சென்ற மாவட்ட குழந்தை நல அலுவலர், வட்டாட்சியர், காவல்துறையினர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 16 நாட்களாக குழந்தை கொரோனா தொற்றுடன் இல்லத்தில் இருந்தது தொடர்பான விவரம் பதிவேட்டில் இடம்பெறாததது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மேலும் முதியோர் இல்லத்தில் அனுமதியின்றி குழந்தைகள் தங்கவைக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர். அதுமட்டுமல்லாது போலி ஆவணங்களை பயன்படுத்தி  குழந்தை விற்பனை செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள இல்லத்தின் உரிமையாளர் சிவக்குமாரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com