தனியாருக்கு கைமாறும் காலை உணவு திட்டம்;  மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!

தனியாருக்கு கைமாறும் காலை உணவு திட்டம்;  மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் வழங்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சென்னையில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கு ஒராண்டுக்கு 19 கோடி ரூபாய் செலவாகிறது. இத்திட்டத்தின் வழியாக ஒராண்டிற்கு 66,030 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.  இப்பணியினை தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தவும், ஒப்பந்தத்தை நிர்ணயிக்கவும், துணை ஆணையர் சரண்யா ஹரி தலைமையில்  குழு அமைக்கபட உள்ளது.

அக்குழுவில்  கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், நிதி ஆலோசகர், தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் (இயந்திர பொறியியல் துறை) ஆகியோர் இடம் பெற உள்ளனர். 

நிபந்தனைகள்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான காலை உணவு வழங்கப்பட வேண்டும். இது குறித்து ஒரு மாதத்திற்கான உணவு வகை பட்டியல் கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் என்றும் இதனை எந்த காரணம் கொண்டும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன் அனுமதியின்றி மாற்றக்கூடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், தினந்தோறும் சமைக்க வேண்டிய உணவின் எண்ணிக்கையை உணவு சமைப்பதற்கு முதல் நாள் சம்பந்தப்பட்ட உதவி கல்வி அலுவலர் அவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

காலை 8.00 மணிக்கு பள்ளியில் காலை உணவு வழங்கப்பட வேண்டும். கால தாமதம் ஏற்படக்கூடாது. காலை 8.00 மணிக்கு மேல் வழங்கப்படும் உணவிற்கு தொகை வழங்கப்படமாட்டாது. மேலும், குழுவால் நிர்ணயிக்கப்படும் அபராதத் தொகையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இஸ்லாமிய பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவதாலும், சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக இருப்பதாலும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட வேண்டிய உணவினை சனிக்கிழமை அன்று அந்த பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

சில நேரங்களில், சனிக்கிழமை விடுமுறை நாளில் பள்ளி வேலை நாளாக அரசு அறிவிக்கும் பட்சத்தில் புதன்கிழமை வழங்க வேண்டிய காய்கறி சாம்பருடன் கூடிய பொங்கல் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருள்கள் (Extraneous substance) கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொண்டு சமைக்கக்கூடாது என 41 கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரருக்கான அபராதம்

கால தாமதாமாக உணவு வழங்கப்படும் போது, தரம் குறைவு, அளவு குறைவு, தரம் குறைந்த மூலப்பொருட்கள், காய்கறிகள், பள்ளிகளுக்கு எடுத்து செல்லும் போது மூடப்படாத வாகனம், சமையல் கூடம் சுத்தம் இல்லாமல் செய்தால் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மேலும் மூன்று முறைக்கு மேல் தவறுகள் தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இதையும் படிக்க:  "சேரி" குஷ்பு விவகாரம்; காங்கிரசார் மீது வழக்கு பதிவு!