அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண விபரம் குறித்த அறிக்கை ...!

அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண விபரம் குறித்த அறிக்கை ...!

தமிழ்நாடு அரசின் அனைத்து மகளிர் இலவச பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணித்தவர்களின் விபரம் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று, மு.க. ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 - ஆம் தேதி முதலமைச்சராக பெறுப்பேற்றார். ஆட்சி பொறுப்பேற்றவுடன்,  அதே நாளில் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தில் கையெழுத்திட்டு அரசாணையும் வெளியிட்டார். இந்த திட்டத்தால் பலரும் பயன்பெற்றனர். 

மேலும் படிக்க : தமிழ்நாட்டின் சாலைகளில் இனி பிங்க் பேருந்துகள்; மகளிருக்கான பிரத்யேக இலவச கட்டண பேருந்துகள்:

இந்நிலையில் நேற்று (05.10.2022) வரை கட்டணமில்லாமல் பயணம் செய்தவர்களின் விபரம் வெளியானது. முதலில், மே 05, 2021 அன்றிலிருந்து மகளிர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதே போல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்தம் உடன்துணையர் ஆகியோர் 2021 ஆம் ஆண்டு ஜூன் 3- ஆம் தேதியிலிருந்தும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று வரை 176 கோடியே 84 லட்சம் மகளிரும், 10.01 லட்சம் திருநங்கைகளும், 129.10 லட்சம் மாற்றுத்திறனாளிகளும், 6.55 லட்சம்  மாற்றுத்திறனாளிகளுடன் துணையர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் செலுத்தி பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 102 கோடியே 83 லட்சம் மற்றும் மொத்த நகர பயணிகளின் எண்ணிக்கை 281 கோடியே 14 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

-- சுஜிதா ஜோதி