முதலமைச்சரிடம் முழு அறிக்கையையும் தாக்கல் செய்தது ஒருநபர் ஆணையம்....!

முதலமைச்சரிடம் முழு அறிக்கையையும் தாக்கல் செய்தது ஒருநபர் ஆணையம்....!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 17 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

2018 ஸ்டெர்லைட் ஆலை சம்பவம்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆலையை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியின்போது நிகழ்ந்த கலவரத்தை கட்டுப்படுத்த  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில்  2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அறிக்கை சமர்பிப்பு: 

இந்த ஆணையம் கடந்த 2018 ஜூன் மாதம் விசாரணை தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 14-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. பின்னர் வழங்கப்பட்ட 6 மாதம் கால கூடுதல் அவகாசம் முடிவுற்ற நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த முழு அறிக்கையை முதலமைச்சரிடம் அருணா ஜெகதீசன்  இன்று சமர்பித்தார்.  

அனுமதியின்றி துப்பாக்கிச்சூடு:

அந்த அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்ளிட்ட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எவ்வித உத்தரவும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.