திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் சேகர் பாபு...

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் சேகர் பாபு...

தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், முதன் முறையாக 112 அறிவிப்புகளை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார். அதன்படி, நாளை முதல் அறநிலையத்துறை சார்பில் செயல்படும் எந்த கோயிலிலும் முடி காணிக்கை கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறினார். 

கோவில்களில் மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்தால் அவர்களுக்கான திருமண மண்டப கட்டணம் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்தார். வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம், தைத்திருநாளில் 10 கோடி ரூபாய் செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் ஆகிய திட்டங்களையும் சேகர்பாபு அறிவித்தார். 

செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் கட்டிடங்கள் கட்டவும் 25 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று குறிப்பிட்டார். 

5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றிவரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். கிராமப்புற பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்கள் மரணமடையும் போது இறுதி சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை 2 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும், 

அவரது வாரிசு தாரருக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி 15000 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் சேகர்பாபு அறிவித்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் 150 கோடி மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பழனி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் 250 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று சேகர்பாபு கூறினார். அழகர் கோவிலில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய விருந்து காதுகுத்து மற்றும் முடி காணிக்கை செலுத்தும் 9 மண்டபங்கள் கட்டப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.