அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் - சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் - சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கான தீர்மானமும்  2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைசென்றதால் அவரால் கட்சியை தொடர்ந்து வழிநடத்தி செல்ல முடியாமல் போனது.

இதையடுத்து  கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும்  டி.டி.வி. தினகரனையும் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும், அது சட்டத்துக்கு புறம்பானது எனவும் கூறியிருந்தார்.   ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் புதிய பதவிகளை உருவாக்கிக் கொண்டது சட்டவிரோதமானது என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு விசாரணையின்போது, சசிகலா மனுவிற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செம்மலை ஆகிய 3 பேரும் பதில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அதில் அ.தி.மு.க. இணைந்ததால்,  தங்களது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும்,  எனவே சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்றும், எனவே சசிகலா வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.