அக்டோபர் 27-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...!

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும். அப்போது, பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுக்குப்பின் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 

இதையும் படிக்க : செல்போன் உதிரி பாக தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக ஐடி சோதனை!

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சத்யபிரத சாஹூ, கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய வாக்குச் சாவடிகள் திருத்தியமைத்தல், மறு சீரமைத்தல் போன்ற பணிகள் அக்டோபர் 9 ஆம் தேதி முடிவடையும் என்றும், அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அன்று முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.