இறுதி ஊர்வலத்துக்கு பாதையை உபயோகிக்க தடை..!உடலை சாலையின் நடுவே வைத்து கதறி அழுத உறவினர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இறுதி ஊர்வலத்துக்கு அனுமதிக்காததால் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது.

இறுதி ஊர்வலத்துக்கு பாதையை உபயோகிக்க தடை..!உடலை சாலையின் நடுவே வைத்து கதறி அழுத உறவினர்கள்!

குமரமலையைச் சேர்ந்த ராமையா என்பவர் வயதுமூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இறுதி ஊர்வலமானது குமரமலையில் இருந்து குன்னங்குடிப்பட்டி வழியே 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுகாட்டிற்கு செல்வதாக இருந்தது.

ஆனால் ஊர் பிரச்சனை காரணமாக நெருக்கமானவர்கள் மட்டுமே அப்பாதையை பயன்படுத்த குன்னங்குடிபட்டி கிராமத்தினர் அனுமதித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடக்கம் செய்வதற்காக ராமையாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட போது, குன்னங்குடிபட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 5 கிலோ மீட்டர் சுற்றிச் சென்று அடக்கம் செய்யுமாறு வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகத்தீர்வு கிடைக்காததால், உடலை சாலையின் நடுவே வைத்து ராமையாவின் உறவினர்கள் கதறி அழுது தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற வருவாய் கோட்டாட்சியர், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, உடலை அடக்கம் செய்ய வழிவகை செய்தார்.