ஜிப்மர் ஆய்வு அறிக்கையை பெற்றோர் தரப்பிடம் வழங்க மறுப்பு...!

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பிடம் புதுச்சேரி ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கையை வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜிப்மர் ஆய்வு அறிக்கையை பெற்றோர் தரப்பிடம் வழங்க மறுப்பு...!

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு:

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த கடலூர் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கலவரம்:

ஜூலை 13 ஆம் தேதி உயிரிழந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, வழக்கு தொடர்ந்ததையடுத்து, அமைதியான வழியில் போராட்டம் நடத்திய மாணவியின் உறவினர்கள், ஜூலை 17 ஆம் தேதி பூதாகரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. 

பள்ளி நிர்வாகிகள் கைது: 

மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்த சின்ன சேலம் போலீசார், பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆய்வறிக்கையை தாக்கல் செய்த ஜிப்மர்:

இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினர், மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து அதன் ஆய்வறிக்கையை கடந்த 22-ந் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பெற்றோர் மனு:

மாணவியின் உடற்கூறு ஆய்வறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழுவின் அறிக்கையின் நகல்களை தங்களுக்கு வழங்க உத்தரவிடக்கோரி மாணவியின் தாயார் தரப்பில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

நகல்களை வழங்க உத்தரவு: 

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி, மாணவியின் உடற்கூறு ஆய்வறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையின் நகல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டார். 
பிரேத பரிசோதனை அறிக்கை:

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கை, மறு பிரேத பரிசோதனை அறிக்கைகளின் நகலும் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எப்.ஐ.ஆர்.) நகலும் வழங்கப்பட்டது.

நீதிமன்றம் மறுப்பு:

தொடர்ந்து, ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கையை தரும்படி கேட்டதற்கு, தற்போது வழக்கு விசாரணை முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கையை வழங்க இயலாது என்றும், அந்த ஆய்வறிக்கை வேண்டுமெனில் ஐகோர்ட்டில் முறையிடும்படியும் நீதிபதி புஷ்பராணி கூறியுள்ளார்.