நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு... 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்...

இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலுக்கு 4 நாட்களுக்கு மீன் பிடிக்க ெசல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு... 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்...

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை  ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்  கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்தது.

விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,  திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில்  பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்தது. இந்த நிலையில் இன்றும் 4 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி,  திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன  மழை பெய்யக்கூடும் என்றும், நாளை  தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன  மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இன்று முதல் 3ம் தேதி வரை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.