4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்... அத்தியாவசிய பொருட்களை தயாராக வைக்க அறிவுறுத்தல்...

தமிழகத்தில் கனமழை காரணமாக இதுவரை 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்... அத்தியாவசிய  பொருட்களை தயாராக வைக்க அறிவுறுத்தல்...

வங்கக்கடலில் கடந்த 13-ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்க உள்ளது. அதே சமயம் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து இருக்கிறது. அதன் பின்னர் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு, அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 2 நாட்களுக்கு குடிநீர், உணவு, பால் மற்றும் காய்கறிகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என, பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.