தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! நாளை மாலை கடலூருக்கு அருகே கரையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

தெற்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை மாலை கடலூருக்கு அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின்  7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! நாளை மாலை கடலூருக்கு அருகே கரையைக் கடக்கும்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் , தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,  நாளை காலை 11 மணி அளவில் தமிழக கடற்கரை பகுதியை நெருங்கும் என்றும், அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

இதன் காரணமாக, நாளை காலை முதல் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று  மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,  கோயம்புத்தூர் தர்மபுரி ஈரோடு கிருஷ்ணகிரி நாமக்கல் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 

நாளை திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

12ஆம் தேதி அன்று கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், 13ஆம் தேதி அன்று நீலகிரி,கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு,  சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், 14ஆம் தேதி அன்று நீலகிரி கோயம்புத்தூர் சேலம் திருப்பத்தூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  கன முதல் மிக கன மழையும், சில பகுதிகளில் அதி கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதி கனமழையும், 21 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகி இருப்பதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம் மற்றும் திருப்பூண்டியில் தலா 31 செண்டி மீட்டரும், காரைக்காலில் 29 செண்டி மீட்டரும், வேதாரண்யத்தில் 25 செண்டி மீட்டரும் மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.  

இதனிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 13ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு வட மேற்காக நகரக் கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.