ராமநவமி ஊர்வலம்... மாற்று பாதையில் நடத்த உத்தரவு!!

ராமநவமி ஊர்வலம்... மாற்று பாதையில் நடத்த உத்தரவு!!

சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர் பிரபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 9 ஆண்டுகளாக அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும், கடந்த 2015ம் ஆண்டு முதல் ராமநவமி  நாளன்று ராமரின் உருவப்படத்துடன் ஊர்வலம் நடத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஊர்வலத்தை நாளை ஜார்ஜ் டவுன் கோரல் மெர்ச்சண்ட் தெருவிலிருந்து பெரம்பூர் பட்டாளம் வரை நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பித்ததாக கூறப்பட்டுள்ளது. 

அந்த மனு மீது முடிவெடுத்து ஊரவலத்திற்கு அனுமதியளிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 50 பேர் மட்டுமே ஊர்வலத்தில் பங்கேற்பார்கள் என்பதால் அமைதியாக முறையில் ஊர்வலம் நடத்தப்படும் எனவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, கடந்த 2015- 16ம் ஆண்டுகளிகளில் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியதாக கூறப்படுவதில் உண்மையில்லை என கூறினார். 

மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் அதிகளவில் இயங்கக்கூடிய பகுதியாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளதாகவும்  பிற மதத்தினர் அதிகளவில் வசித்து வருவதால் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், ஊர்வலத்திற்கு அனுமதி கோரி கடந்த  மாதமே மனு கொடுத்ததாகவும், நாளை காலை ராம நவமி கொண்டாட உள்ள நிலையில், அனுமதி மறுத்து இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது, வேண்டுமென்றே தாமதிக்கும் செயல் என குற்றம்சாட்டப்பட்டது.

காவல்துறை வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாற்று வழியில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி புதிய மனுவை அளிக்குமாறு பாரத இந்து முன்னணி தரப்பிற்கும், அதை பரிசீலித்து முடிவெடுக்க காவல்துறை தரப்பிற்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிக்க:  எந்த அரசாணையும் இல்லை என்பது வருந்தத்தக்கது மட்டுமல்ல வஞ்சிக்கத்தக்கது...!!!