ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்... வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்!!

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்...  வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்!!

யாஸ் புயல் காரணமாக பாம்பனில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக, பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாம்பனில் சின்னபலம், தோப்புக்காடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடல் நீரானது வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதனிடையே, பலத்த சூறைக்காற்றும் வீசி வருவதால், பாம்பன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதோடு, நங்கூரத்தை அறுத்துக் கொண்டு ஆங்காங்கே மோதி நிற்கின்றன. இந்நிலையில், பாறைகளில் தரை தட்டி நிற்கும் படகுகளை மீட்க முடியாமல் பாம்பன் பகுதி மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ராமேஸ்வரம் பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.