மயான அமைதியில் சென்னை.. நிம்மதி பெருமூச்சு விடும் ராஜீவ் காந்தி மருத்துவமனை...கொரோனாவை வெற்றிக்கொள்ளுமா தமிழக அரசு!!

மயான அமைதியில் சென்னை.. நிம்மதி பெருமூச்சு விடும் ராஜீவ் காந்தி மருத்துவமனை...கொரோனாவை வெற்றிக்கொள்ளுமா தமிழக அரசு!!

சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ராஜீவ்காந்தி மருத்துவமனை,  ஆம்புலன்ஸ் சத்தம் எதுவுமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

கொரோனா 2வது அலை உச்சத்தின் போது, சென்னையிலும் அதன் பாதிப்பு உணரப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளும் வரிசைக்கட்டி நின்றனர். ராஜீவ் காந்தி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் முன் ஆம்புலன்ஸ்கள் வரிசைக்கட்டி நின்ற காட்சிகள் பலரையும் நிலைக்குலைய  செய்தது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூட, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை, ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் காத்திருந்து உயிரிழக்கின்றனர் என வரிசையாக புகார் வந்தது. 

அதுமட்டுமல்லாது சென்னையில் எப்போது எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சத்தமாகவே கேட்டது.. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக அத்தனை ஆம்புலன்ஸ்களும் ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து கொண்டே இருந்தன.

ஆனால் தற்போது நிலைமை ததலைக்கீழாக மாறிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். . முன்பெல்லாம் தினமும் 250-லிருந்து 270 அவசர நோயாளிகள் ஆம்புலன்சில் வந்தனர்.. இப்போது, அது 120ஆக குறைந்துள்ளது.

அதேபோல, படுக்கைகளும் காலியாக கிடக்கின்றன.. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே ஸ்பெஷலாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.. மொத்தம் 2050 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன... அவையும் ஹவுஸ்ஃபுல் ஆகி கிடந்தது.. ஆனால், தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர்.

மொத்தம் உள்ள 2050 படுக்கைகளில் 1455 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் இருப்பதாகவும், 595 படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

படுக்கைகள் காலியாக கிடப்பதும், டாக்டர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் பெருத்த நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தி வருகிறது..

இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துவிடும், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்கின்றனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்.