முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

அ.தி.மு.க-வில் 2016-2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர்  எம்.ஆர் விஜயபாஸ்கர்.  இவர் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புதுறையினருக்கு பல புகார்கள் வந்தது. குறிப்பாக கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தேசிய நெடுஞ்சாலைகளில் ஜி.பி.எஸ் கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பான ஒப்பந்தத் தொகையை 23 கோடி ரூபாயில் இருந்து 900 கோடி ரூபாயாக உயர்த்தியது தொடர்பாக ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது குற்றஞ்சாட்டினார்.

செங்கல்பட்டு முதல் திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்களை கண்காணிக்கவும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஒளிப்பட்டைகள் உள்ளிட்டவை பொருத்துவதற்காக 2019ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டபோது 10 முறை அந்த டெண்டரை தள்ளிவைத்து 23 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை 900 கோடி ரூபாய்க்கு உயர்த்தியதாக குற்றம் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சாதகமான நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கும் வகையில், விதிகளை மாற்றி அமைத்து போக்குவரத்துத் துறையில் ஊழல் செய்ததாகவும் புகார்கள் கூறப்பட்டது.

தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தி.மு.க ஆட்சியமைத்தவுடன் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கந்தசாமி நியமிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஊழல் விவகாரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக ஆவணங்களை சேகரித்து வந்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் தொடர்பான லஞ்சப் புகார்கள் குறித்தும், நடவடிக்கை குறித்தும்  ஆலோசனை நடத்தியத்காக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது அதன் முதற்கட்டமாகத்தான் அ.தி.மு.க-வின் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சருக்கு சொந்தமாக உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு, சாயப்பட்டறை, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட 20 இடங்களிலும், சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அவரது வீடு என மொத்தம் 21 இடங்களில் 21 டி.எஸ்.பி-க்கள் தலமையில் 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமசந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் ராஜா அண்ணாமலைபுரம் அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்த சோதனையை காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் பயன்படுத்திய இனோவா கார் உட்பட அவரின் வீட்டில் உள்ள பல்வேறு சொத்து ஆவணங்களையும், வங்கி வரவு செலவு கணக்குகளையும் பெற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து   அதனை பிரிண்டர் மூலம் நகல் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம் செய்தியாளர்களை சந்திக்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சொத்து ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை சரியாக வைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெறும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு  அ.தி.மு.க நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பதுரை, அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் சோதனையில் நடைபெறும்போதே வீட்டிற்குள் சென்று விஜயபாஸ்கர்-ஐ சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதி பரபரப்பாக காணப்பட்டதுடன், பாதுகாப்புப் பணிக்காக போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். மேலும், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை அ.தி.மு.க கழகம் எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

 இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறிய தகவலில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததது தொடர்பாக  சுமார் ஒரு மாதகாலம் ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டியதன் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இன்று மாலை வரை இந்த சோதனையானது நீடிக்கும் எனவும் சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களும், கோடிக்கணக்கான ரூபாய் பணமும் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.