"திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது" ஆர்.எஸ்.பாரதி!

திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின், சென்னை மண்டலம் மற்றும் புதுவை மாநிலத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, சிற்றரசு ஆகியோர் பங்கேற்றனர். 

அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மேடையில் பேசுகையில், திமுகவினர் வாயிலிருந்து என்ன வருகிறது என்று வட்டமிடும் கழுகு போல ஓநாய்களாக ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. அப்படி வருகிற ஓநாய்களுக்கு நாம் இறையாகி விடக்கூடாது.  இலக்கியத்தாலும்  கலையாலும் தான் இந்த கட்சி வளர்ந்தது. அண்ணா எழுதிய வசனங்கள் தான் சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி எல்லாம் கொள்கைகளை பரப்பி தான் இந்த இயக்கம் வளர்ந்தது. அதை பரப்புகின்ற பொறுப்பு தான் உங்களிடமும் கொடுக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு வயிற்று எரிச்சலாக இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை நாம் ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல பேசுகிறார்கள். அண்ணாமலைக்கு எவ்வளவு கொழுப்பு திமிர் இருந்தால் அண்ணாவை  பற்றி பேசுகிறார். குறைந்தபட்சம் காஞ்சிபுரத்தில் ஆவது 10 கொடும்பாவிகள்  கொளுத்தியிருக்க வேண்டாமா...? என ஆவேசமாக தெரிவித்தார். 

நாம் அனைவரும் இன்று ஒரே நாற்காலியில் அமர்கிறோம் என்றால் உட்கார வைத்தவர் அண்ணா. அந்தக் காலத்தில் அண்ணாதுரை என்று பெயர் சொன்னாலே பளார் என்று அறைக்கொடுப்பார்கள். என்னுடைய கார் ஓட்டுனர் ஒருமுறை அண்ணாதுரை என்று அழைத்ததற்கு நான் ஒரு அறை கொடுத்தேன். குறிப்பிட்ட சிலர் அண்ணாதுரை மற்றும் ஈவேரா என்று அழைக்கிறார்கள் அவர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது எனக் கூறிய அவர், நான் வன்முறையை தூண்டவில்லை. நம் உணர்வுகள் தூண்டப்பட வேண்டும் என்று தான் கூறுகிறேன். அப்படி என்ன பேசிவிட்டார் உதயநிதி. எவ்வளவு கேவலமாக பேசுகிறார் நிர்மலா சீதாராமன் எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், நிர்மலா சீத்தாராமன் பெரியாரை பற்றி பச்சையாக புளுகுகிறார். இவர்கள் இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்றால் நாம் எல்லாம் மௌனிகளாக இருக்கிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு தபால் கூட கொடுக்க மறுத்தனர். அச்சமூகத்தில் பிறந்த ராஜாவை மத்திய மந்திரி ஆக்கியது ஆதிக்க சக்திகளுக்கு எரிச்சல் ஊட்டியது. அவர் மீது வழக்குகள் பதிந்தனர். இருப்பினும் அவர் வெற்றி கண்டார் என தெரிவித்தார்.  

மேலும், ஏழரை லட்சம் கோடி ஊழலை ஊர் முழுவதும் கூறி விடுவோம் என்ற பயத்தில் திசை பாஜகவினர் திசைதிருப்பகின்றனர் என தெரிவத்த ஆர் எஸ் பாரதி, அண்ணா பற்றி அண்ணாமலை பேசிய பிறகுதான் அண்ணாவைப் பற்றி  பலர் ஆராய்ச்சி செய்கின்றனர். இவர்கள் பேசிய பிறகுதான் அண்ணாவை பெரியாரை அம்பேத்கரை பற்றிய நூல்கள் அதிக அளவில் விற்கப்படுகின்றன எனக் கூறினார். 

இதையும் படிக்க: வியாபாரியை தாக்கிய எஸ்.ஐ.; ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்!