பொதுப் பல்கலை. நுழைவுத் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக  சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

பொதுப் பல்கலை. நுழைவுத் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!!

சட்டமன்றத்தில் அரசின் தனித் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஸ்டாலின், நடப்பு கல்வியாண்டு முதல், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுமூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

பிளஸ் 2  மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்றும் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று பேரவை கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

பெரும்பாலான மாநிலங்களில், 80 சதவீத மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள்தான் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நீட் போன்றே இந்த நுழைவுத் தேர்வும், மாணவர்களுக்கு பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை உருவாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்றும் கூறினார். மாநில அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று  ஒன்றிய அரசை வலியுறுத்துவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்  தனித் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.  பாஜக மட்டும் எதிர்ப்புத் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தது. இதையடுத்து குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.