பத்மசேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜர்...

பத்மசேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜர்...

மாணவிகள் அளித்த  பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக  பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும்   கைதான ஆசிரியர் உட்பட 5  பேருக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்  சம்மன் அனுப்பியுள்ள  நிலையில் பள்ளியின் முதல்வர் கீதா மற்றும் தாளாளர் ஷீலா உள்ளிட்டோர் நேரில் ஆஜரானார்.

சென்னை K.K. நகர் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரதம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி   உள்ளது.   இந்த வழக்கை கையில்  எடுத்துள்ள காவல்துறை  ஆசிரியர் ராஜகோபாலனால்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான  மாணவிகள் தன்னிடம் வாட்ஸ் ஆப் மூலமோ, தொலைபேசி வாயிலாகவோ புகார் தெரிவிக்கலாம் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை ஆணையர் ஜெயலட்சுமி அறிவித்திருந்தார் புகார் கொடுப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்று கூறி  சமூக வலைதளங்களில்  தனது வாட்ஸ் ஆப் எண்ணை துணை ஆணையர் பகிர்ந்திருந்தார். இந்த  நிலையில், அவரது வாட்ஸ் அப் எண்ணிற்க்கு மாணவிகளின் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் பலரும் தொலைபேசி வாயிலாகவும் வாட்ஸ் அப்பிலும் தொடர்புகொண்டு பள்ளியில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து தகவல்களை ஏராளமாக பகிர்ந்துள்ளனர். மாணவிகள் அளித்துள்ள புகார் தொடர்பாக ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக ரகசிய விசாரணை மேற்கொண்டு உறுதியாகும் பட்சத்தில் தனித்தனி வழக்காக பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனிடையே மாணவிகள் அளித்த  பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக  பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும்   கைதான ஆசிரியர் உட்பட 5  பேருக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.  முதன்மை கல்வி  அலுவலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜுன் 4 ஆம் தேதி நேரில் ஆஜராகி பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என  குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் சரண்யா ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில் தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பத்மசேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் பள்ளியின் தாளாளர் ஷீலா நேரில் ஆஜராகியுள்ளார்.