தமிழில் வணக்கம் கூறிய ஆளுநர் : தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பாராட்டு

ஜனவரி 12ம் தேதி, உலக தமிழ் நாளாக கொண்டாடப்படும் என ஆளுநர் ஆர். என். ரவி அறிவித்துள்ளார். 

தமிழில் வணக்கம் கூறிய ஆளுநர் : தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பாராட்டு

புதிய உருமாறிய கொரோனா பரவலுக்கு இடையே  நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது.  இதில் தமிழில் வணக்கம் கூறிய உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை மனமார பாராட்டியிருந்தார். குறிப்பாக அரசின் தமிழ்வழி கொள்கை உறுதிப்பாட்டினை  வரவேற்பதாக குறிப்பிட்டிருந்தார்.  தாய் மொழியின் மேல் உள்ள பற்றால் இரு மொழி கல்விக்கொள்கையை தமிழக அரசு ஆதரித்து வருவதாகவும் கூறினார். 

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையின்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதிசெய்யும் எனவும் கூறினார்.  இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதிபாட்டுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். வரும் நாட்களில் ‘ஜனவரி 12ம் தேதி’ உலக தமிழ் நாளாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.

அதுமட்டுமல்லாது அண்டை மாநிலங்களுடனான நட்புறவுப்பற்றி பேசிய ஆளுநர், தமிழகம் அனைத்து மாநிலங்களுடன் ஆக்கப்பூர்வமான உறவினை பேணும் என்றும் ஆனால் அதன் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என குறிப்பிட்டார்.  இலங்கை அரசு சிறைபிடித்த 68 மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார். அதுமட்டுமல்லாது நதிநீர் பங்கீட்டில் தமிழக அரசு தனது உரிமையை விட்டுக்கொடுக்காது என்றும்,  கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது கட்டாயமாக்கப்பட்டு இருப்பதை வரவேற்ற ஆளுநர், வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரதமணித் திருநாடு! என பாரதியார் பாடலை நினைவுகூர்ந்து தமது உரையை நிறைவுசெய்தார்.