4-வது நாளாக நீடிக்கும் வேலைநிறுத்தம்...முதலமைச்சர் தலையிட வேண்டும்...தொழிலாளர்கள் கோரிக்கை!

4-வது நாளாக நீடிக்கும் வேலைநிறுத்தம்...முதலமைச்சர் தலையிட வேண்டும்...தொழிலாளர்கள் கோரிக்கை!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 4-வது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்தத்தால் 400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தங்களை அழைத்துப் பேச வேண்டும் என விசைத்தறியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மின்கட்டணம் உயர்வு:

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். அதன்படி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்தது. 

வேலை நிறுத்த போராட்டம்:

இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க: புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.. !

அரசுக்கு வருவாய் இழப்பு:

இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். தொடர்ந்து நீடிக்கும் வேலைநிறுத்தத்தால் அரசுக்கு 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விசைத்தறியாளர்கள் வேதனை:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணத்தை கட்ட முடியாத நிலை இருப்பதாக கூறும் தொழிலாளர்கள் விசைத்தறிகளை எடைக்குப் போட்டு விட்டு, வேறு வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

வலியுறுத்தல்:

தொடர்ந்து, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு விசைத்தறியாளர்களை அழைத்துப் பேசி உரிய நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.